சென்னை பெரம்பூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் தாக்குதல் நடத்தியாக புகார் எழுந்துள்ளது.
பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணயில் அங்கம் வகிக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பெரம்பூர் தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார். தினமும் அவர் பெரம்பூர் தொகுதியில் பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி இன்று எம்கேபி நகர் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் கல்லூரி சாலை, எம்.கே.பி.நகர், கல்யாணபுரம், சத்தியமூர்த்தி நகர், உதய சூரியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார். இந்த நிலையில், சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் அருகே நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அந்த பகுதியை சார்ந்த ஒருவர் கத்தியோடு ஓடி வந்து தனபாலனை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
அவர் தப்பிய நிலையில் உடன் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த அதிமுக நிர்வாகி சிவக்குமார் என்பவர் மீது அரிவாள் வெட்டு விழுந்தது. அரிவாளால் வெட்டிய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த சிவக்குமாரை பரப்புரையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் மற்றும் அதிமுகவினர் எம்கேபி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டபடி சென்று புகார் அளித்தனர்.
திமுக பிரமுகர் ஒருவர் தான் என்.ஆர்.தனபாலனை கொல்ல முயன்றதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் திமுகவுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தாகுதல் சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. தாக்கியவர்கள் திமுகவினர் இல்லை என்று பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தெரிவித்துள்ளார்.