டிரெண்டிங்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் 11 தீர்மானங்கள்...

webteam

போக்குவரத்து தொழிலாளர் பிரச்னையில் முதலமைச்சரே பேசி முடித்து வைக்க வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கண்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநரின் ஆய்வுகளை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

காணமல் போயிருக்கும் அனைத்து மீனவர்களின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரண உதவியை மேலும் காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா அரசு முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளப் பெற்று இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. யாருடைய விருப்பத்திற்கும் அசைந்து கொடுக்காமல் நேர்மையான வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில உரிமை, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளை வலியுறுத்தி 2018 மார்ச் 24, 25ஆம் தேதிகளில் ஈரோட்டில் மண்டல மாநாட்டை நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.