டிரெண்டிங்

திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் - சேலத்தில் அதிமுக வேட்பாளர் கைது

திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் - சேலத்தில் அதிமுக வேட்பாளர் கைது

ஜா. ஜாக்சன் சிங்

சேலத்தில் வாக்கு சேகரிப்பின் போது அதிமுக வேட்பாளர் திமுகவினரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அதிமுக சார்பாக 58-வது வார்டில் போட்டியிடும் பாண்டியன் என்பவர் இந்திரா நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில், திமுகவினர் மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் சாக்கடை சரிசெய்யும் பணியை மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், அப்பகுதிக்கு சென்ற அதிமுக வேட்பாளர் பாண்டியன், தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வாக்குவாதம் முற்றி அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், திமுக வேட்பாளரின் சகோதரர் சின்னையன் என்பவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அன்னதானபட்டி காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், அதிமுக வேட்பாளர் பாண்டியன் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, சேலம் அரசு மருத்துவமனைக்கு
வந்தபோது போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனிடையே, அதிமுக வேட்பாளரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதற்காக காவல்துறையினர் வாகனத்தில் அழைத்து சென்றனர். அதிமுக வேட்பாளர் வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.