டிரெண்டிங்

சொல்வதோ வளர்ச்சி ! நடப்பதோ மதவாத ஆதரவு: ஸ்டாலின் கண்டனம்

சொல்வதோ வளர்ச்சி ! நடப்பதோ மதவாத ஆதரவு: ஸ்டாலின் கண்டனம்

rajakannan

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம் ராஜ்ய யாத்திரை” என்ற பெயரில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டுகிறோம் என்ற போர்வையில் தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்துவதற்கும், அந்த யாத்திரை நடத்துவதற்கு அனுமதித்துள்ள அதிமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், “உச்சநீதிமன்றத்தில் ராமர் கோயில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இப்படி நாடு முழுவதும் ராமர் கோயில் கட்ட ஆதரவு திரட்டுவதற்காக யாத்திரை நடத்துவது உச்சநீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, நீதிமன்றத்திற்கே அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகவே எண்ணிட வேண்டியதிருக்கிறது. சட்டத்தின் ஆட்சியை மத்திய பா.ஜ.க. அரசு மதிக்கிறது என்றால், அதன் துணை அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும். ஆனால் “வளர்ச்சி” என்று முழக்கமிட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் மதசார்பற்ற தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவோரின் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்கள் அப்படியெல்லாம் எச்சரிக்கவும் தயாராக இல்லை, அறிவுரை வழங்கவும் தயாராக இல்லை என்பது நாட்டின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. 

சமூக நல்லிணக்கம் நிலவும் தமிழ் மண்ணில் மத துவேஷத்தை, மத பயங்கரவாதத்தை கிளப்பி விட்டு ஆட்சிக்கு வந்து விடலாம் என்று பா.ஜ.க.வும் சரி அதன் துணை அமைப்புகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது மிகுந்த கவலையளிக்கிறது. விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் “ரத யாத்திரையை” தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் உடனடியாக அதிமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மீறி நுழைந்தால் தமிழகத்தின் எல்லையிலேயே அவர்களை கைது செய்து உத்தரபிரதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் உச்சநீதிமன்றத்திற்கு மதிப்பளித்து இது போன்ற சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாத்திரைகள் நடத்தும் இந்துத்துவா அமைப்புகளை எச்சரித்து அரசியல் சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.