டிரெண்டிங்

“கைகூப்பி கேட்கிறேன்..வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம்” - கர்நாடக அமைச்சர் சிறப்பு பேட்டி

“கைகூப்பி கேட்கிறேன்..வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம்” - கர்நாடக அமைச்சர் சிறப்பு பேட்டி

webteam

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு கர்நாடக நீர் பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறித்து கர்நாடகா கட்டவுள்ள மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள கர்நாடக எம்.பிக்களுடன் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் முன்னாள் பிரதமர் தேவ கௌடா, மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக எம்.பிக்கள் மேகதாது அணைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் நிலையில், அதற்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று சிவக்குமார் விளக்கினார். 

இந்த ஆலோசனைக்கு பின்னர் புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், மேகதாது அணையால் தமிழகத்திற்கு பலன் உண்டு என்றும் தெரிவித்தார். 

அமைச்சர் சிவக்குமார் அளித்த பேட்டியின் முழுவிவரம்:-

  • கர்நாடக எம்பிக்களுடனான சந்திப்பின் காரணம்?

தமிழ்நாடு எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ஒற்றுமையாக இருந்து போராடுகின்றனர். எனவே கர்நாடக எம்பிக்களிடம் இது குறித்து விவரிக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம். அணை அமைய இருக்கும் இடம், அதற்கான செலவு, அணையால் தமிழகமும் பயன்பெறப் போகிறது, சட்டத்தை மீறி இதனை செய்யவில்லை என்பதை விவரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. டெல்லி வந்துள்ள கர்நாடக எம்பிக்களிடம் இதனை விரிவாக எடுத்துரைத்தேன். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். 

  • மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக ஏன் இவ்வளவு தீவிரமாக உள்ளது? தமிழகம் அல்லது கர்நாடகா இதில் எது பயன்பெறப் போகிறது?

இந்த அணை தமிழகத்துக்கும் தான் பலனளிக்க போகிறது. 177 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பது தீர்ப்பு. அது முறைப்படி வழங்கப்படும். நீர் வீணாக கடலில் கலப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. இந்த ஆண்டு 450 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவில் இருந்து வழங்கப்பட்டது. ஆனால், தமிழகத்தால் முறையாக அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை. வீணாக கடலுக்குத் தான் சென்றது. அதனை சரி செய்ய இந்த அணை பயன்படும். தமிழகமும் இதனால் பலன் பெறும். 

  • இதற்கு முன்பு தமிழகத்திற்கு தண்ணீர் விடுமாறு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை கர்நாடகா பின்பற்றவில்லை? அப்படியிருக்கையில் இப்பொழுது எப்படி கர்நாடகாவை நம்புவது?

நீர் பங்கீடு விவகாரம் எங்கள் கையில் இல்லை. தற்போது மத்திய நீர்வள ஆணையத்திடமே இந்த அதிகாரம் உள்ளது. மத்திய அரசுதான் இவற்றை கையாள்கிறது. அவர்களே நீர் திறப்பை முடிவு செய்கிறார்கள். வேறென்ன உங்களுக்கு வேண்டும். 

  • மேகதாது அணை நீரை பாசனத்துக்கு பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா?

நிச்சயமாக. நான் கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் மீது சத்தியம் செய்கிறேன். இந்த நீரை பாசனத்துக்கு பயன்படுத்த மாட்டோம். அணை கட்டும் இடத்தை வந்து பார்வையிடுங்கள். திட்டம் குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். ஏன் இதனை வைத்து அரசியல் செய்கிறீர்கள்? 

  • திட்டம் குறித்து விளக்க தமிழக அரசுக்கு அழைப்பு விடுக்கிறீர்களா?

தமிழ்நாடு அரசு, ஊடகங்கள், அதிகாரிகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அணை கட்டும் இடத்தை வந்து பார்வையிடுங்கள். அணை கட்டும் இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், தமிழக எல்லை உள்ளது. அங்கு ஒரு ஏக்கர் விவசாயம் கூட செய்யவே முடியாது. 

  • உங்கள் அடுத்த நடவடிக்கை என்ன? அதிமுக எம்பிக்கள் ஒற்றுமையுடன் போராடுகின்றனர். அதிமுக எம்பிக்கைள் குறிப்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் பேசுவீர்களா? 

தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். இந்த விவகாரத்தில் ஒற்றுமையாக இருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதிமுகவிடம் மட்டுமல்ல அனைத்து தமிழக கட்சிகளிடமும் பேச தயாராக உள்ளோம். 

  • அனைத்து கட்சிகளிடமும் இதனை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதா?

நாங்கள் ஏற்கெனவே இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். அதிமுக, திமுக என அனைவரும் இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பணிகலை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை நடத்த முடியும். 

  • ஏற்கெனவே நீங்கள் அனுப்பிய கடிதத்திற்கு தமிழக அரசு என்ன பதில் அளித்தது? 

நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். மத்திய அரசு முன்னிலையில் இரு மாநிலங்களும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாங்கள் விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறோம். மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். 

  • தமிழக அமைச்சர்கள் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை எனக் கூறி இருக்கிறார்களே?

நான் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம்