இந்தியாவின் டெக் நகரமாக இருக்கும் பெங்களூரு ஐ.டி. கம்பெனிகளுக்கு மட்டுமல்ல டிராஃபிக் ஜாமுக்கும் பிரபலமானதுதான். ஒவ்வொரு நாளும் டிராஃபிக்கில் சிக்கி சின்னாபின்னமாகி வீடு சென்று சேர குதிரைக்கொம்பாக இருக்கிறது என புலம்புவோரே பெங்களூருவில் அதிகம்.
அதுவும் கார் வைத்திருப்போர் என்றால் சொல்லவே வேண்டாம். காரில் உள்ள மூன்றாவது கியரெல்லாம் பயன்படுத்தியே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பெங்களூரு போக்குவரத்து நெரிசலால் படாதபாடு பட்டுப்போகிறார்கள்.
இப்படி இருக்கையில், அண்மைக் காலமாக பெங்களூருவில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஏற்கெனவே டிராஃபிக் சிக்கல், இதில் மழையால் வந்த வெள்ளமும் சேர்ந்து வதைப்பதால் பெங்களூருட்டீஸ் விழிப்பிதுங்கி போய் இருக்கிறார்கள்.
அது தொடர்பான வீடியோக்களும், ஃபோட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவின் மோசமான நிலை குறித்த சஹில் மேத்யூ என்ற ட்விட்டர் பயனர் ஒருவரது பதிவு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.
அதன்படி, மேத்யூ தனது ட்விட்டர் பக்கத்தில் கூகுள் மேப்பின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்திருக்கிறார். அதில், மஹாதேவப்புராவில் இருந்து பெல்லந்துர் வரையிலான எட்டு கிலோ மீட்டர் தொலைவை நடந்தே சென்றால் 1 மணிநேரம் 42 நிமிடத்தில் கடந்துவிடலாம்.
ஆனால் அதே தொலைவை காரில் சென்றால் 1 மணிநேரம் 41 நிமிடமாகும். அதாவது காரில் செல்வதை விட நடந்தே சென்றால் அதிகபட்சம் 1 நிமிடம்தான் கூடுதலாக நேரம் செலவிட வேண்டியிருக்கும் என கூகுள் மேப்பில் இருப்பதை மேத்யூ ஷேர் செய்திருக்கிறார். இந்த பதிவுதான் நெட்டிசன்களிடையே உடனடியாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
பலரும் “நடக்குறதுக்கு இருக்கட்டும், நீச்சல் அடிச்சுட்டு போன எவ்வளவு நேரத்துல போய் சேரலாம்” என கிண்டலாக பதிவிட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் “காருக்கு பதில் அனைவரும் நடந்தும் சைக்கிளிலும் சென்றால் பெங்களூருவின் முக்கியமான இந்த டிராஃபிக் பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்கும்” என கமெண்ட் செய்திருக்கிறார்கள்.