Kodye Elyse | Brian SWNS
டிரெண்டிங்

“குழந்தைகளை பராமரித்தாலும் இதற்கெல்லாம் தடை” - விவாகரத்தான தம்பதியின் நூதன ஒப்பந்தம்!

விவாகரத்து பெற்றிருந்த போதும் குழந்தைகளுக்காக சில முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் அமெரிக்காவை சேர்ந்த தம்பதி

Janani Govindhan

திருமண உறவில் காதல், அன்பு, மரியாதை, நம்பிக்கை போன்ற பல விஷயங்களை இழக்கும் நேரத்தில் அதற்கு தீர்வாக முன்வந்து நிற்பது என்னவோ விவாகரத்துதான். தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகரித்து வந்தாலும், விவாகரத்துக்கு பின்னான வாழ்வென்பது குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒருபோலவும், குழந்தை இருப்பவர்களுக்கு ஒருபோலவும் இருக்கிறது.

உதாரணத்துக்கு குழந்தையில்லாத தம்பதியெனில், விவாகரத்தினால் வரும் கஷ்டங்களும் நஷ்டங்களும் மட்டுமே சம்பந்தப்பட்டவர்ளை சேரும். இதுவே குழந்தைகளை கொண்ட தம்பதிகள் விவாகரத்து பெற்றால், யார் குழந்தைகளை கவனித்துக் கொள்வார்கள் என்ற கேள்வியும் அது குறித்த அழுத்தங்களுமே பெரும் உளைச்சலாக தம்பதிக்கு உண்டாகும். அதிலும் அந்த குழந்தைகள் சிறார்களாக இருந்தால் விவாகரத்து பெற்றவர்களின்பாடு திண்டாட்டம்தான்.

அப்படியான சிக்கல்களை தவிர்க்க அமெரிக்காவைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற தம்பதி மிக முக்கியமான முடிவுகளை எடுத்து அதனை செயல்படுத்தியும் வருகின்றனர். இது குறித்து ஆங்கில ஊடகங்களில் அவர்களேவும் பேசியுள்ளனர்.

அதன்படி, கோடி எலிஸ் என்ற 35 வயது பெண்ணும், பிரையன் என்ற 38 வயது ஆணும் திருமணமான பிறகு கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். இருப்பினும் தங்களது 10, 8 வயதை உடைய இரு மகள்கள் மற்றும் 6 வயது மகனை இருவருமே பராமரித்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதனால் அடிக்கடி எலிஸும் பிரையனும் நேரில் சந்தித்தும், ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆகையால் வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இருவரும் ஒன்றாக சேர்ந்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது, குடும்பமாக கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

இருப்பினும் இருவருக்குமிடையே தம்பதி என்ற பெயரில் தனிப்பட்ட ரீதியில் உடல் மற்றும் மன ரீதியான எந்த உறவும் இருத்தல் கூடாது என்ற உடன்படிக்கையுடனேயே பழகி வருகிறார்களாம்.

இருவரும் திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் இருந்து பிரிந்திருந்தாலும், இருவருமே வேறொரு உறவிலும் ஈடுபடவில்லையாம். இதுபோக, குழந்தைகள் இல்லாமல் எலிஸும் பிரையனும் விவாகரத்துக்கு பிறகு தனியாக இருந்ததும் இல்லை என்றும், ஒருவேளை சந்தர்ப்பம் அப்படியான சூழலை ஏற்படுத்தி இருந்தாலும் கூட அவர்களுக்கான கட்டுப்பாட்டை மீறுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக கோடி எலிஸும் பிரையனும் 2006ம் ஆண்டு சந்தித்த பிறகு ஐந்தாண்டுகளாக காதல் வாழ்க்கையில் இருந்து கடந்த 2011ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.