டிரெண்டிங்

கருணாஸ் உடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

கருணாஸ் உடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

webteam

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கருணாஸ் எம்.எல்.ஏ வை  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கல் சந்தித்தனர்.

நடிகர் கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு கடந்த 16ம் தேதி சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாஸ், தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூராக பேசியதாக அவர் மீது 8 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனையடுத்து வேலூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை சிறையில் உள்ள கருணாஸை சந்திக்க, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் எம்.எல்.ஏக்கள் வந்த போது விசாரணை கைதிகளை சந்திக்க அனுமதில்லை என சிறைத்துறை காவலர்கள் கூறினர். இதனையடுத்து இன்று மாலை வழக்கறிஞர்கள் என்ற முறையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மாநாபன், சோளிங்கர் எம்.எல்.ஏ பார்த்திபன் ஆகியோர் சிறையில் உள்ள கருணாசை சந்தித்து பேசினர். 

சுமார் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. சிறையில் உள்ள எம்.எல்.ஏ கருணாஸை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோளிங்கர் எம்.எல்.ஏ பார்த்திபன், “சிறையில் உள்ள கருணாஸை சக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், வழக்கறிஞர் என்ற முறையிலும் அவரை சந்தித்தோம். மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. எங்கள் தலைமையின் அறிவுறுத்தல் மற்றும் அனுமதியுடன் (அ.ம.மு.க) தான் கருணாஸை சந்தித்தோம்” என்று கூறினார்.