டிரெண்டிங்

பெரியாரை அரசியல் குருவாக ஏற்ற சீடர் காமராசர்

webteam

கர்ம வீரர் காமராசரின் 45 நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுதந்திரத் தமிழகத்தின் முதல் தலைமுறைக்குக் கல்விக்கண் திறந்த அந்த இரும்பு மனிதரின் வாழ்க்கையை விளக்குகிறது இந்தத் செய்தித்தொகுப்பு

1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர் காமராசர். பதவியிலிருந்து வெளியேறும் போது வெறும் இரண்டு பெட்டிகளோடு வீடு திரும்பிய எளிமையின் சிகரம் காமராசர். அரசியலில் மாற்று கொள்கைளோடு திகழ்ந்தாலும் தந்தை பெரியாரை தனது குருவாக காமராசர் ஏற்றுக்கொண்டது மாற்றுக் கொள்கைகளுக்கு அவர் அளித்த மதிப்பினை காட்டுகிறது.

காமராசர் ஆட்சி அமைப்போம் என்ற குரல் தமிழகத்தில் இன்றும் ஒலித்து வருவதே அவரது ஆட்சியின் மேன்மையை உணர்த்துகிறது.கல்வி‌ பயில்வதுடன், பசியை போக்கிக் கொள்ளும் அன்னக் கூடங்களாக, பள்ளிக்கூட‌ங்களை முதன் முதலில் மாற்றியவரும் காமராசரே. அவர் ஆரம்பித்த மதி‌ய உணவு திட்டம் தான் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப நாடெங்கும் பல்வேறு வடிவங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன.

நாட்டை அடுத்து ஆள வேண்டியது யார் என்பதை சுட்டிக்காட்டும் அளவிற்கு உயர்ந்த காமராசர் படிக்காதவர் என்பதை நம்புவது சற்று சிரமம் .இரும்பு மங்கை என பெயர் பெற்ற இந்திரா காந்திக்கு அரசியல் குருவாக இருந்தார் பெருந்தலைவர் காமராசர். காங்கிரஸ் கட்சியில் அரசியல் சூத்திரதாரியாக இருந்து பிரதமரையும் முதல்வர்களையும் உருவாக்கி கிங் மேக்கர் என புகழ் பெற்றவர் காமராசர். எளியோரின் ஏற்றத்திற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த காமராஜர் 1975ஆம் ஆண்டு இதே அக்டோபர் இரண்டாம் நாளில் மண்ணுலகை நீத்து விண்ணுலகு சேர்ந்தார். காமராசரின் மக்கள் சேவையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் உயரிய குடிமக்கள் விருதான பாரதரத்னா 1976ஆம் ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டது