செயல்படாத நிறுவனங்கள், அவற்றின் இயக்குநர்களை தகுதி நீக்கம் செய்து மத்திய கம்பெனி விவகாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில், சசிகலாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஷெல் கம்பெனிகள் எனப்படும், பெயரளவிலான நிறுவனங்களின் இயக்குநராக இருந்து கொண்டு முறைகேடான நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர் மீது மத்திய அரசு நடவடிக்கை தொடங்கியுள்ளது. அதன்படி, பல ஆண்டுகளாக செயல்படாத அல்லது வர்த்தகத்தில் ஈடுபடாமல் பெயரளவுக்கு தொடங்கப்பட்ட நிறுவனங்களை கண்டுபிடித்து உரிமத்தை ரத்து செய்து வருகிறது. அந்த வரிசையில், இயக்குநராக தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிரபலங்களின் பட்டியலை மத்திய கம்பெனி விவகாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் பிரமுகர் ரமேஷ் சென்னிதாலா, வளைகுடா நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி ஆகியோரின் பெயர்கள் உள்ளன. சசிகலா தொடர்புடைய, 4 செயல்படாத நிறுவனங்களின் உரிமத்தை கம்பெனிகள் பதிவாளர் ரத்து செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.