டிரெண்டிங்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் அதிரடியாக தகுதி நீக்கம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் அதிரடியாக தகுதி நீக்கம்

rajakannan

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தனித்தனியே மனு அளித்தனர். இதனையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்கி இருந்தனர். 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மனு அளித்ததை தொடர்ந்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடி அணிக்கு தாவினார். அதேநாளில் கருணாஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ஆளுநரிடம் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று மனு அளித்தனர். இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. 

ஆளுநர் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், தினகரன் மற்றும் திமுக தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இதனால் நெருக்கடி ஏற்படும் என்பதை உணர்ந்த எடப்பாடி அணியினர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ஏனெனில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அணிக்கு சிக்கல் ஏற்படாது.

இத்தகைய நிலையில், கர்நாடக மாநிலம் குடகில் உள்ள விடுதியில் தங்கியுள்ள தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை மட்டும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் இன்று உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆணையை பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டார். அதில், 1986-ம் ஆண்டு பேரவை உறுப்பினர் விதியின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வர் அணிக்கு தாவிய எம்.எல்.ஏ. ஜக்கையன் மீது தகுதி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

மறைந்த ஜெயலலிதா தவிர்த்து சட்டசபையில் தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 135 பேர். அதில் சபாநாயகர் தவிர்த்து 134 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியும். தற்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் பேரவை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116 ஆக குறைந்துள்ளது. அதேபோல், ஒட்டுமொத்த சட்டப்பேரவை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும் ஜெயலலிதா தவிர்த்து 215 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 108 உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்ற நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் 116 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது அணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

இதனை தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களுக்கு முடிவு கட்டியுள்ளதாக கருதப்படுகிறது.