டிரெண்டிங்

தேர்தல் பணிகளை கவனிக்க உள்ளதால் போட்டியிடவில்லை : நாராயணசாமி விளக்கம்

தேர்தல் பணிகளை கவனிக்க உள்ளதால் போட்டியிடவில்லை : நாராயணசாமி விளக்கம்

Veeramani

என் மீது அமீத்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டும் ஏன் இதுவரை வழங்கவில்லை, இதன் மூலம் பொய்யை கூறி ஆட்சிக்கு வர பாஜக முயற்சிப்பது நிரூபணமாகின்றது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ புதுச்சேரியில் தேர்தல் துறையினை பொறுத்தவரை பாரபட்சமின்றி நடத்த வேண்டும், வேட்பு மனு பரிசீலனை முடிந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்களை தேர்தல் துறை மிக காலதாமதமாக கொடுக்கப்பட்டுள்ளது இது விதிமுறைகளுக்கு மீறிய செயல். இந்த தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும், ஆனால் பாஜக அதிகாரம் மற்றும் பணபலத்தை வைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது, மத்திய அரசின் அமைப்புகள் இங்கு வந்து முகாமிட்டு ஒரு சில நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இது அதிகார துஷ்பிரயோகம்” என குற்றம் சாட்டினார்.

பாஜக ஆதாரமற்ற குற்றசட்டுகளை காங்கிரஸ் அரசு மீதும் தன் மீதும் குற்றஞ்சாட்டியுள்ளது. புதுச்சேரியில் உள்ள பஞ்சாலைகளை மூடியது அப்போதை ஆளுநர் கிரண்பேடி, அதற்கு ஒப்புதல் அளித்தது மத்திய பாஜக அரசு. புதுச்சேரியில் அரசு பொதுத்துறை நிறுவனங்களை மூடியது, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மறுத்தது கிரண்பேடி, அதற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு. தற்போது காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றஞ்சாட்டுவது தேர்தல் ஆதாயத்திற்கானது என்று  நாராயணசாமி தெரிவித்தார்

மேலும் “புதுச்சேரி அரசுக்கு 15 ஆயிரம் கோடி வழங்கப்பட்டதாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க வலியுறுத்தினேன் இதுவரை நிரூபிக்க முடியவில்லை நான் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் சவால் விடுத்தேன் ஆனால் பாஜக வாய்மூடி மவுனியாக உள்ளது இதன் மூலம் பொய்யை கூறியே ஆட்சிகு வர முயற்சிப்பதாகவும் மேலும் புதுச்சேரியில் எல்லோரையும் மிரட்டி, கூட்டணி கட்சிகளையும் மிரட்டி ஆட்சிக்கு வரவேண்டும் என பாஜக முயற்சிக்கிறது. ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறாது.

நடைபெறும் பொதுத்தேர்தலில் நிற்க சோனியாவும், ராகுலும் என்னை வலியுறுத்தினார்கள் ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியம் தேர்தலில் நிற்பதால், தேர்தல் பணிகளை கவனிப்பதற்காகவே தான் தேர்தலில் நிற்கவில்லை. ஏனாம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மல்லாடி திடீரென என்.ஆர்.காங்கிரசை ஆதரித்தால் அங்கு மாற்று வேட்பாளரை தேர்வு செய்ய காலதாமதம் ஏற்பட்டது. எனவே அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் கோலப்பள்ளி அசோக் என்ற வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி  ஆதரவளிக்கும். மேலும் பாஜக தலைமையில் கூட்டணியா? என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் கூட்டணியா என்று தெரியவில்லை ஆகவே அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பாஜக போட்டியிடும் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிடுவது அந்த அணிக்கு பின்னடைவு எனவே மதச்சார்பற்ற அணி புதுச்சேரியில் கண்டிப்பாக வெற்றி பெறும்” என நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.