டிரெண்டிங்

ரூ.8 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்குமா? : மத்திய அரசுக்கு தம்பிதுரை கேள்வி

ரூ.8 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்குமா? : மத்திய அரசுக்கு தம்பிதுரை கேள்வி

webteam

மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் 8 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்குமா என மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்

மத்திய அரசு பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சமீபத்தல் நிறைவேற்றியது. பின்  10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த மசோதாவிற்கு அதிமுக சார்பில் தம்பிதுரை எம்.பி. மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதில்  “சாதி என்று ஒன்று இருக்கிற வரை இடஒதுக்கீடு என்பது தொடரவே வேண்டும் எனத் தெரிவித்த தம்பிதுரை ஒவ்வொருவருடைய கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவோம் என்று பிரதமர் வாக்குறுதியளித்தாரே, அதை நிறைவேற்றியிருந்தால் இத்தகைய பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு அவசியமே வந்திருக்காது” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் 8 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ளவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அறிவித்துள்ள மத்திய அரசு,  8 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்குமா என்றும் அதனை மத்திய அரசு  இடைக்கால பட்ஜெட்டில் தாக்கல் செய்யுமா எனவும் கேள்வி எழுப்பினார்.