டிரெண்டிங்

ஒரே ஹெல்மெட்தான்.. ஒன்றல்ல இரு முறை உயிரை காப்பாற்றிய திக் திக் நொடிகள்!

ஒரே ஹெல்மெட்தான்.. ஒன்றல்ல இரு முறை உயிரை காப்பாற்றிய திக் திக் நொடிகள்!

JananiGovindhan

ஹெல்மெட் அணியச் சொல்லி டிராஃபிக் போலீசும் அரசும் பல முறை பல வழிகளில் அறிவுறுத்தியும் அபராதம் விதித்து வந்தாலும் ஒரு சிலரை தவிர பலரும் அதனை பின்பற்றாமல் போவதால் சாலை விபத்துகள் நேரும் போது உயிரிழப்புகளும், படுகாயங்களும் ஏற்படுகின்றன.

ஆனால் மிகப்பெரிய விபத்தில் சிக்கினாலும் தலைக்கவசம் அணிந்திருந்ததன் ஒரே காரணத்தால் உடலில் சில காயங்களோடு மட்டும் உயிர் பிழைத்தவர்கள் பற்றிய வீடியோக்களும், செய்திகளும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருப்பதும் தவறுவதில்லை.

அந்த வகையில், ஹெல்மெட் அணிவதால் யாருக்கு என்ன லாபம் என்ற வீண் விதண்டாவாதங்கள் எழுந்துக் கொண்டிருக்கும் வேளையில், ஹெல்மெட் அணிந்ததன் காரணத்தால் ஒருவரின் உயிருக்கு எந்த சேதமும் இல்லாமல் ஒன்றல்ல இரண்டு முறை தப்பியிருக்கும் சம்பவம் குறித்த வீடியோ ஒன்றை டெல்லி காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

அதில், “பைக்கை ஓட்டிவந்த நபர் ஒருவர் ஆபத்தான முறையில் சாலையில் சறுக்கிச் செல்கிறார். அப்போது பைக்கில் இருந்து அவர் கீழே விழுகிறார். ஆனால் அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் சேதத்திலிருந்து தப்பித்திருக்கிறார்.

பைக்கில் இருந்து விழுந்து எழுந்த அதே வேளையில், ஒரு விளக்கு கம்பம் அந்த மீது வீழ அப்போதும் அவர் தலையில் ஹெல்மெட் இருந்ததால் பலத்த காயம் ஏற்படாமல் பிழைத்திருக்கிறார்.”

வெறும் 16 நொடிகளே கொண்ட இந்த வீடியோவை பகிர்ந்த டெல்லி காவல்துறை, “ஹெல்மெட் அணிவதால் ஒன்றல்ல இரண்டு மூன்று மற்றும் பல முறை உங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த வீடியோ கிட்டத்தட்ட 15 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.