டிரெண்டிங்

Decoding Dhoni's Speech - சென்னையின் தோல்விக்கு காரணமாக அமைந்த அந்த ஒரு ஓவர்!

Decoding Dhoni's Speech - சென்னையின் தோல்விக்கு காரணமாக அமைந்த அந்த ஒரு ஓவர்!

webteam

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முதலில் பந்து வீசியிருந்தது. சென்னை அணியின் பௌலர்கள் வழக்கத்தை விட வேகமாக பந்துவீசியிருந்தனர் ஏறக்குறைய சரியாக ஒன்றரை மணி நேரத்துக்குள்ளேயே பந்துவீசி முடித்துவிட்டனர். இதனால் போட்டி வழக்கத்தை விட ஒரு 10-15 நிமிடங்கள் முன்பே முடிந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதைபோலவே வெகு சீக்கிரமாக 10:58 க்கே போட்டியும் முடிந்துவிட்டது. ரசிகர்களுக்கு சீக்கிரமே குட்நைட் சொன்னதற்காக இதை வரவேற்கலாம்.

ஆனால், சிஎஸ்கே இந்த போட்டியை மட்டுமே சீக்கிரம் முடித்துக்கொள்ளவில்லை. இந்த தொடரையும் சேர்த்தே சீக்கிரம் முடித்திருக்கிறது. பெங்களூருவிற்கு எதிரான தோல்வியின் மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு 99% தகர்ந்துவிட்டது.

சென்னை அணி இதற்கு முன் ஆடியிருந்த 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது. மீதமுள்ள 6 போட்டிகளிலும் தோற்றிருந்தது. பெரும்பாலான போட்டிகளில் ரொம்பவே தடுமாறி திணறிதான் தோற்றிருக்கும். ஆனால், நேற்று பெங்களூருவிற்கு எதிராக சென்னை அப்படி தோற்கவில்லை. முதலில் பந்துவீசி முடிந்த போதாகட்டும் சேஸிங்கை தொடங்கி முன்னெடுத்த சமயத்தில் ஆகட்டும் சென்னை ரொம்பவே பாசிட்டிவ்வாகத்தான் ஆடிக்கொண்டிருந்தது. ஆட்டமும் சென்னையின் கட்டுக்குள் இருப்பதாகவே தெரிந்தது. அழுத்தமெல்லாம் பெங்களூருவின் மீதுதான் இருந்தது. ஆனாலும், கடைசியில் சென்னை தோற்றிருக்கிறது. என்ன காரணம்? சென்னை எங்கே கோட்டைவிட்டது?

ஜடேஜா கேப்டன் பதவியிலிருந்து விலகி சன்ரைசர்ஸூக்கு எதிரான கடந்த போட்டியில் தோனி மீண்டும் கேப்டன் ஆன போது தோனியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்துமே தோனி தெளிவாக பேசியிருப்பார். 'சில ஓவர்கள்தான் எங்களுக்கு பிரச்சனையாக இருந்திருக்கிறது. பல போட்டிகளிலும் ஒரே ஓவரில் 20-25 ரன்களை வழங்கியிருக்கிறோம். அந்த பெரிய ஓவர்கள்தான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தின. அந்த மாதிரியான ஓவர்களில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்' என தோனி பேசியிருப்பார்.

பெங்களூருவிற்கான இந்த போட்டியின் போதுமே டாஸில் இதே விஷயத்தை மீண்டும் குறிப்பிட்டு பேசியிருப்பார். போட்டியின் முடிவையே தலைகீழாக மாற்றும் பெரிய ஓவர்கள்தான் இதுவரை எங்களுக்கு பிரச்சனையாக இருந்திருக்கிறது என்பதே தோனியின் கூற்று. இதுவரை மட்டுமல்ல. இந்த போட்டியிலுமே தோனி சொன்ன அந்த விஷயம் மீண்டும் ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது.

பெங்களூரு அணியின் பேட்டிங்கின் போது அவர்களுக்கு கிடைத்த ஒன்றிரண்டு பெரிய ஓவர்களும், சென்னை அணியின் சேசிங்கின் போது அவர்களுக்கு கிடைக்காமல் போன அந்த ஒன்றிரண்டு பெரிய ஓவர்களும்தான் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றியது. பெங்களூரு பேட்டிங் ஆடியபோது கடைசி ஓவரை ப்ரெட்டோரியஸ் வீசியிருந்தார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக்கே ஸ்ட்ரைக்கில் இருந்தார். ப்ரெட்டோரியஸ் வீசிய முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் lbw ஆனார். அம்பயரும் அவுட் கொடுத்தார். அது நூறு சதவீதம் அவுட் போன்றே தெரிந்தது. ஆனால், தினேஷ் கார்த்திக் ரிவியூவ் எடுத்தார். அதில் லெக் ஸ்டம்ப் லைனில் பந்து சில மில்லிமீட்டர்கள் வெளியே பிட்ச்சாகி இருப்பதாக தெரிந்தது. இதனால், தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒரு வாய்ப்பை பெற்றார். இந்த பந்தில் நாட் அவுட்டாக இருந்தார்.

முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் அவுட் ஆகியிருந்தால், ப்ரெட்டோரியஸூக்கு இது மிகச்சிறந்த ஓவராக மாறியிருக்கும். பெங்களூருவும் ஒரு 10-12 ரன்களை குறைவாக எடுத்திருக்கும். தினேஷ் கார்த்திக் எடுத்த ரிவியூவ் அதற்கெல்லாம் வழியே இல்லாமல் செய்தது.

இந்த மூன்று பந்துகள்தான் சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக இணையதளங்களில் ரசிகர்கள் அதிகமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த ஓவருக்கு முன்பாக ப்ரெட்டோரியஸ் வீசிய ஓவருமே மோசம்தான். அவர் வீசிய 18 வது ஓவரிலும் 18 ரன்கள் சென்றிருந்தது. கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் செய்ததை அந்த 18 வது ஓவரில் லோம்ரர் செய்திருந்தார்.

பெரிய ஓவர்கள் என கணக்கிட்டு பார்த்தால், இந்த இரண்டு ஓவர்களையும் தாண்டி பெங்களூரு அணிக்கு பவர்ப்ளேயிலும் ஒரு பெரிய ஓவர் கிடைத்திருந்தது. முகேஷ் சௌத்ரி வீசிய 5 வது ஓவரில் 18 ரன்கள் அவர்களுக்கு கிடைத்திருந்தது. கோலி நன்றாக டைமிங் செய்து கவர்ஸில் அட்டகாசமான சிக்சரை அடித்திருப்பார். ஆக, பெரிய ஓவர்கள் என கணக்கிட்டு பார்த்தாலே பெங்களூருவிற்கு 18, 18, 16 என ரன்கள் கிடைத்த மூன்று பெரிய ஓவர்கள் அவர்களது இன்னிங்ஸில் இருக்கிறது. இப்போது சென்னைக்கு வருவோம்.

ருத்துராஜ் + கான்வே ஓப்பனிங் கூட்டணி அரைசதத்தை கடந்தது. கான்வே கூடுதலாக நின்று பெரிய இன்னிங்ஸை ஆடியிருந்தார். மிடில் ஆர்டரில் மொயீன் அலி கணிசமான பங்களிப்பை கொடுத்திருந்தார். ஆட்டம் சீராக சென்று கொண்டிருந்தது. ஆனாலும், சென்னை தோற்றது. காரணம், அந்த பெரிய ஓவர்கள் இல்லாமல் போனது.

தோல்வி உறுதி என்ற நிலையில் ஆட்டமே முடிந்தபிறகு கடைசி ஓவரில் சென்னை அணி 17 ரன்களை எடுத்திருந்தது. இதைத்தாண்டி சென்னை அணி அதிக ரன்களை அடித்த ஓவர் எது என தேடிப்பார்த்தால் பவர்ப்ளேக்கே செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே ஹசரங்கா வீசிய 6 வது ஓவரில் சென்னை அணி 14 ரன்களை எடுத்திருக்கிறது. கடைசி ஓவரை தவிர்த்துவிட்டு பார்த்தால் சென்னை அணி அதிக ரன்களை ஸ்கோர் செய்த ஓவர் இதுதான். சேஸிங்கில் பெரிய சரிவுகளின்றி சென்னை சீராக ஸ்கோர் செய்ததுதான். ஆனால், அதை வெற்றிகரமாக முடிக்க தேவையான பெரிய ஓவர்கள் சென்னைக்கு எங்கேயுமே கிடைக்கவில்லை.

'முதலில் பேட்டிங் ஆடும்போது நீங்கள் உள்ளுணர்வின்படி ஆட வேண்டும். சேஸ் செய்யும்போது கால்குலேட்டிவ்வாக ஆட வேண்டும்.' என Post Match Presentation இல் தோனி பேசியிருப்பார். கடைசிக்கட்ட ஓவர்களில் அதிக ரன்கள் அடிக்க வேண்டி இருந்த நெருக்கடி குறித்தும் கொஞ்சம் வெளிப்படையாகவே வீரர்களை விமர்சித்திருப்பார். 'உங்களுக்கு விருப்பமான ஷாட்களை ஆடுவதை விட அணிக்கு தேவையான ஷாட்களை ஆட வேண்டும்' என பேசியிருப்பார். ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்கள் ஆடி சுமாரான ஓவர்களை பெரிய ஓவர்களாக மாற்றாமல் விட்ட பேட்ஸ்மேன்களின் மீதான தோனியின் ஆதங்கம் இது.

பார்ட் டைமரான மேஸ்வெல் 4 ஓவர்களை வீசி 22 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேக்ஸ்வெல் ஒரு ஆஃப் ஸ்பின்னர். அதேநேரத்தில், வனிந்து ஹசரங்கா ஒரு லெக் ஸ்பின்னர். அவர் 3 ஓவர்களை வீசி 31 ரன்களை கொடுத்திருந்தார். ஹசரங்கா மற்றும் மேக்ஸ்வெல் வீசிய சமயங்களில் பெரும்பாலும் க்ரீஸில் இடதுகை பேட்ஸ்மேன்களாகவே இருந்தனர். இதை ஒரு மேட்ச் அப்பாக பார்க்கலாம். பொதுவாகவே இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக லெக் ஸ்பின்னர்கள் வீசுகிறார்கள் எனில் அது இலகுவான ஆப்சனாக பார்க்கப்படும். லெக் ஸ்பின் டெலிவரிக்களை இடதுகை பேட்ஸ்மேன்கள் ரொம்பவே எளிதில் எதிர்கொள்வர். அதேநேரத்தில் ஆஃப் ஸ்பின்னர்கள் எனில் இடதுகை பேட்ஸ்மேன்களால் லெக்ஸ்பின் அளவுக்கு சுலபமாக அடித்து ஆட முடியாது. இதைப்பற்றி விரிவாக தனியாக பேசலாம்.

இந்த மேட்ச் அப்பின் படியே பார்ட் டைமராக இருந்த போதும் ஆஃப் ஸ்பின் வீசிய மேக்ஸ்வெல்லுக்கு எதிராக கான்வே, மொயீன் அலி போன்றவர்கள் கொஞ்சம் அடக்கியே வாசித்திருந்தனர். அதேநேரத்தில், ஹசரங்கா லெக்ஸ்பின்னர் என்பதால் கொஞ்சம் வெளுத்துவிட்டிருந்தனர். இதைத்தான் தோனியும் Post Match Presentation இல் குறிப்பிட்டு பேசியிருந்தார். உங்களுக்கு விருப்பமானதை ஆடுவதை விட அணிக்கு தேவையானதை ஆட வேண்டும் என கொஞ்சம் கறாராகவே கூறியிருப்பார். 6 வது பௌலரான மேக்ஸ்வெல்லின் ஓவரில் இன்னும் ரிஸ்க் எடுத்து அந்த பெரிய ஓவர்களை நிகழ செய்திருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். சென்னையே 13 ரன்களில்தானே தோற்றிருக்கிறது?

-உ.ஸ்ரீராம்