கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பங்கேற்காதது மீண்டும், அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு நேற்று விப் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். பிப்ரவரி 6ம் தேதி தொடங்கி 15வரை நடைபெறும் கூட்டத்தொடரில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் ரிசாட்டில் தங்கிய 4 பேரும் அடங்குவர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிக அளவில் வராததை சுட்டிக் காட்டி பாஜக எம்.எல்.ஏக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். மஜத-காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி ஆளுநர் உரையை வாசிக்க விடாமல் குரல் எழுப்பினர். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. தற்போதைய கூட்டணி அரசு தொடர்வதற்கு தார்மீக ரீதியாக உரிமை கிடையாது என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு சித்தராமையா மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கூட்டத்தொடர் முடியும் வரை தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களே பலர் குமாரசாமி தலைமையிலான அரசை ஏற்றுக் கொள்ள முடியாது, சித்தராமையா தான் தங்களுக்கு முதலமைச்சர் என்று கூறியிருந்தனர். இது, முதல்வர் குமாரசாமிக்கு கோபத்தை மூட்டியது. தேவ கௌடா கூட ‘இதற்கு மேல் பொருக்க முடியாது’ என்று காட்டமாக பேசி இருந்தார். பின்னர், சித்தராமையா பேசி ஒருவழியாக அதனை சமாளித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 37 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க, மஜதவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியையும் அவர்களுக்கு காங்கிரஸ் கொடுத்தது.
கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தக் கூட்டணி ஆட்சியில் தொடர்ச்சியாக சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மஜத சார்பில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால், காங்கிரஸ் தரப்பில் அமைச்சரவை அமைத்தது முதல் சமீப காலம் தொடர்ச்சியாக சிக்கல்கள் நிலவி வருகின்றன. தற்போது சட்டசபை கூட்டத் தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் பங்கேற்காதது, மஜத - காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் சிக்கலை ஏற்பட்டுத்தியுள்ளது. கர்நாடக அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது. ஏனெனில், பெரும்பான்மையை விட இந்தக் கூட்டணிக்கு சில எம்.எல்.ஏக்களே அதிகமாக இருக்கிறார்கள்.