Lila, Jessica  Facebook
டிரெண்டிங்

இதுதான் “தன் வினை தன்னை சுடுமா?” - மகளின் சுட்டித்தனத்தால் அபேஸான தாயின் ரூ.2.45 லட்சம்.. என்ன நடந்தது?

தன்னை தொந்தரவு செய்யக்கூடாதென நினைத்து, குழந்தையின் கையில் செல்ஃபோனை கொடுத்திருக்கிறார் தாயொருவர். அப்போது அந்தக் குழந்தை சுமார் 2.45 லட்ச ரூபாய்க்கு அமேசானில் ஆர்டர் செய்து, ஆன்லைனில் பணமும் செலுத்திவிட்டதாம்!

Janani Govindhan

குழந்தைகளின் அழுகையை, பிடிவாதத்தை நிறுத்த, திசை திருப்ப உலகில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் செல்ஃபோனை அவர்கள் கையில் கொடுத்து அவர்களை சமாளிப்பது வழக்கம். பெற்றோரின் இத்தகைய செயல்களால், செல்ஃபோனில் கேம் விளையாடுவது, வீடியோஸ் பார்ப்பது என குழந்தைகளும் அதனுள்ளேயே மூழ்கி விடுகிறார்கள்.

இப்படி வெகுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்தபடி மொபைலையே பார்த்துக்கொண்டிருப்பதால் கண் பார்வை பாதிப்பதோடு, உடல் பருமனும் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டாகிறது. தன்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என நினைக்கும் பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் செல்ஃபோனை கொடுத்து பழக்கப்படுத்த, அது காலப்போக்கில் அவர்களுக்கே கேடாக வந்து நிற்கும் அளவுக்கு நிலை மாறிவிடுகிறது.

கேடு என்பது, ஆரோக்கியம் சார்ந்தோ அல்லது பொருளாதாரம் சார்ந்தோ இருக்கலாம். அதிக நேரம் ஃபோன் பார்ப்பதால் ஆரோக்கியம் பாழாவது சரியான வாதம்தான். ஆனால் இதில் பொருளாதாரம் பாதிக்க என்ன இருக்கிறது என உங்களுக்கு கேள்வி எழலாம். இதற்கு பதிலாக இருப்பதுதான் அமெரிக்காவில் நடந்த ஒரு பரிதாப சம்பவம்.

Jessica

அதன்படி, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜெசிகா என்பவரின் 5 வயது சுட்டி பெண் குழந்தை தனது தாயின் செல்ஃபோனில் இருந்து அமேசானில் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் லட்சத்துக்கு விளையாட்டு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார். இதனைக் கண்ட அதிர்ந்துப்போன ஜெசிகா செய்வதறியாது விழிப்பிதுங்கி போயிருக்கிறார்.

கார் ஓட்டும் போது தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதற்காக மகள் லிலாவிடம் ஜெசிகா ஃபோனை கொடுத்து அமரச் செய்திருக்கிறார். ஆனால் லிலாவோ அம்மாவின் அமேசான் கணக்கை வைத்து தனக்கு தேவையானவற்றை(!) ஆர்டர் செய்து அதற்கான கட்டணத்தை ஆன்லைன் வழியாகவே கட்டும்படி செய்திருக்கிறார்.

Lila

இப்படியாக 3,180 அமெரிக்க டாலருக்கு பூட்ஸ், ஜீப், பைக்ஸ் என அனைத்தையும் ஆர்டர் செய்திருக்கிறார் லிலா. இதில் சில பொருட்கள் மட்டும் டெலிவரி செய்யப்பட்டுவிட்டதாம். அவை வந்தவுடன் சுதாரித்துக்கொண்ட ஜெசிகா மோட்டார் சைக்கிள், ஜீப்பை தவிர பூட்ஸ் மற்றும் சில பைக்குகளுக்கான ஆர்டரை ரத்து செய்திருக்கிறாராம்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் லிலாவை எந்த விதத்திலும் ஜெசிகா தண்டிக்கவோ கண்டிக்கவோ இல்லையாம்.

ஏனெனில் “நாங்கள் சொல்வதை கேட்டு ஒழுங்காக நடந்துக் கொண்டிருந்தால் நாங்களே அவருக்கு ஏற்ற ஒரு கியர் பைக்கை வாங்கிக் கொடுக்கலாம் என்றிருந்தோம். ஆனால் அவசரப்பட்டுவிட்டார்” என ஜெசிகா NBC 10 நியூஸ் தளத்திடம் பேசியிருக்கிறார்.

Online order history

அதேபோல லிலாவிடம் ஏன் இத்தனை மோட்டார் சைக்கிள் டாய்ஸை ஆர்டர் செய்தாய் என கேட்டபோது , “ஏன்னா எனக்கு ஒன்னு தேவைப்பட்டது” என பதில் தெரிவித்திருக்கிறார். இந்த மாதிரியான சம்பவத்தில் உங்கள் வீட்டு பிள்ளைகளும் ஈடுபட்டிருக்கிறார்களா அல்லது ஈடுபடுகிறார்களா? அப்போ நீங்க என்ன செய்வீங்க / என்ன செஞ்சீங்க என கமெண்ட் பண்ணுங்க!