காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தின் முடிவுகள் பற்றி யூகங்கள், வதந்திகள் பரப்ப வேண்டாம் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 351 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 52 இடங்களில் மட்டும் வென்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை. 17 மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் மே 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தோல்விக்கு மூத்த தலைவர்கள்தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தின் முடிவுகள் பற்றி யூகங்கள், வதந்திகள் வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து மட்டுமே காரியக் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் மதிப்பளிக்க முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் தேவையான அனைத்து மாற்றங்களையும் செய்ய கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.