தினகரன் தரப்பு குக்கர் சின்னம் குறித்து மேல்முறையீடு செய்வதால் முதலமைச்சர் பழனிசாமி கலக்கமடைந்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், “தமிழகத்தை புறக்கணிக்கின்ற, அவமதிக்கின்ற செயலில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தொடர்ந்து வஞ்சித்து வருகின்றது. தற்போது 6 வார காலத்துக்குள் மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் தாமதப்படுத்த முயற்சிக்கின்றது. அதுபோல் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஷேல் கேஸ் திட்டங்களை பொதுமக்கள் கருத்தறியாமல் தமிழகத்தில் செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துவிட்டு, 24 இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கு டெண்டர் வழங்கியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறியது மட்டுமல்லாமல், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்புக்கு அவசியமில்லை என்றும் அறிவித்துள்ளது. இதனை கண்டிக்கின்றோம். இந்தத் திட்டத்தின் மீது மக்கள் அச்சமும், பீதியும் அடைந்துள்ள நிலையில் மக்களின் கருத்தை அறியாமல் திட்டத்தை செயல்படுத்துவது ஏற்புடையதல்ல. இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற செயல். எனவே இதுபோன்ற நேரங்களில் தமிழக அரசு மாநிலத்தின் உரிமையை விட்டுக்கொடுக்காமல் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் (ரஜினிகாந்த்) கருத்துக் கூற அச்சப்படுகின்றனர். ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மையை விசாரித்து ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தான் முழுமையாக வெளியிட வேண்டும். தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியிருப்பது குறித்து மேல்முறையீடு செய்வதன் மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலக்கமடைந்துள்ளார்” எனக் கூறினார்.