திருத்தணி பகுதி கிராமங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்கி வருகின்றது. கொரோனா பரவலில் தமிழக அளவில் சென்னை, செங்கல்ப்பட்டுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் உள்ளது. மாவட்டத்தில் நகர் பகுதிகளில் மட்டுமே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கை முறைக்கு திரும்பியுள்ளனர். தினம்தோறும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வருவதால் கொரோனா தொற்று கிராம பகுதிகளுக்கும் பரவி வருகின்றது.
குறிப்பாக இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் முதல் முறையாக அம்மையார்குப்பம், கதனநகரம், எரும்பி ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதேபோல், திருத்தணி நகரம், ஒன்றியத்தில் 20-க்கும் மேற்ப்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கடந்த வாரத்தில் 6 பேர் பாதிக்கப்படிருந்த நிலையில் நேற்று பொம்மராஜிப்பேட்டை, வடகுப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனை கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமங்களிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் வீடுகளில் உள்ளவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள், கிராமங்களில் வீடு வீடாக சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகள் குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து சுகாதாரத்துறை சார்பில் தொற்று பரவியுள்ள பகுதிகள், தடை செய்யப்பட்டு சுகாதார தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கட்டாயமாக கடைபிடித்து, முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உடல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக் வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.