டிரெண்டிங்

பொது முடக்கத்தினால் வேறு மாநிலம் செல்ல தடை - எல்லையில் நடந்த திருமணங்கள்..!

பொது முடக்கத்தினால் வேறு மாநிலம் செல்ல தடை - எல்லையில் நடந்த திருமணங்கள்..!

webteam

திருப்பூரில் உள்ள தமிழக - கேரள மாநிலங்களுக்கான எல்லை சோதனைச் சாவடியில் மூன்று திருமணங்கள் நடந்தன.

பொதுவாக அனைத்து மதத்தினரும் தங்களது திருமணத்தை வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது வசதிக்கேற்ப திருமண மண்டபங்களிலோ நடத்துவது வழக்கம். ஆனால் அதற்கு மாறாகச் சோதனைச் சாவடி அருகே திருமணங்கள் நடத்தப்படும் சம்பவம் திருப்பூரில் அரங்கேறியது. திருப்பூரில் தமிழக-கேரள ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை உள்ளது. அதாவது உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணார் செல்லும் சாலையிலுள்ள சின்னார் சோதனைச் சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாப்பிள்ளைகளுக்கும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மணமகள்களுக்கும் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

மாநில எல்லைகளில் போக்குவரத்து இல்லாத காரணத்தாலும், மற்ற மாநிலங்களுக்குச் செல்ல அனுமதி கிடைக்காத காரணத்தாலும் திருமணம் செய்ய முடியாமல் திருமண வீட்டார் தவித்து வந்தனர். இதனையடுத்து மாநில எல்லையில் வைத்து திருமணத்தை முடித்து விடலாம் என எண்ணிய பெற்றோர், கேரள மாநில சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையை நாடினர். அவர்கள் சோதனை சாவடியில் வைத்து திருமணம் நடத்திக்கொள்ள ஏற்பாடு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து தமிழகத்திலிருந்து மாப்பிள்ளைகளை மாநில எல்லைப் பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு வைத்து திருமணத்தை முடித்து மணமகளை - மணமகன் உடன் அனுப்பி வைத்தனர். கேரள மாநிலத்தில் திருமணத்திற்கு மணப்பெண்ணுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதால், உறவினர் யாரும் செல்ல முடியாமல், திருமணம் முடிந்த பின்னர் மணமகளை மட்டும் மணமகன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு மூன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

முதலாவதாகக் கேரள மாநிலம் காந்தலூர் பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்ற மணப்பெண்ணுக்கு உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மணமகனுக்கும் திருமணம் நடைபெற்றது. இரண்டாவதாக காந்தலூர் மிஷன் வயல் பகுதியைச் சேர்ந்த வேதகனி என்ற மணமகளுக்கும், அமராவதி நகர்ப் பகுதியைச் சார்ந்த முத்தப்ப ராஜா என்ற மணமகனுக்கும் திருமணம் முடிந்தது. மூன்றாவதாக மூணாறு அருகே உள்ள ஒரு தேயிலை எஸ்டேட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற மணமகளுக்கும், சென்னையைச் சேர்ந்த நிர்மல் ராஜ் என்ற மணமகனுக்கும் திருமணம் நடந்தது.