டிரெண்டிங்

கொரோனா சிறப்பு வார்டில் படுக்கைகள் இல்லாதநிலை - வேலூர் அரசு மருத்துவமனையில் அவலம்

கொரோனா சிறப்பு வார்டில் படுக்கைகள் இல்லாதநிலை - வேலூர் அரசு மருத்துவமனையில் அவலம்

webteam

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தரையில் படுத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் போதிய படுக்கை வசதி இல்லாமல் கோவிட் நோயாளிகள் தரையில் படுத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியின் தூய்மை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அவருடன் தொடர்புடைய 7 பேரை காக்க வைத்ததோடு, வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல, கொரோனா குணமடையாமல் 8 நாட்களிலேயே பெண் காவலர் ஒருவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முறையான உணவும், குடிநீரும் வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

முன்னதாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனை சிஎம்சி தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருவதாக தெரிவித்தார்.

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆரம்ப கட்டத்திலேயே மாவட்ட நிர்வாகம் 500 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருந்த நிலையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளால் அனைவருக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.