டிரெண்டிங்

உத்தராகண்ட்டில் வாய்ப்பை நழுவவிட்ட காங்கிரஸ் - தோல்விக்கு காரணம் என்ன?

உத்தராகண்ட்டில் வாய்ப்பை நழுவவிட்ட காங்கிரஸ் - தோல்விக்கு காரணம் என்ன?

Sinekadhara

உத்தராகண்டில் காங்கிரஸ் தோல்விக்கு காரணங்களாக கூறப்படுவதென்ன? பார்க்கலாம்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் நாளுக்குநாள் தேய்ந்து போனாலும், அதிலிருந்து பிரிக்கப்பட்ட உத்தராகண்டில் பாரதிய ஜனதாவுக்கு சமமான வலிமையில்தான் இருந்தது.

வாய்ப்பை நழுவவிட்ட காங்கிரஸ்:

இருகட்சிகளும் மாறி மாறி அங்கு ஆட்சியைப்பிடித்து வந்த நிலையில், இந்தமுறை பாரதிய ஜனதா, தனது ஆட்சிக்கு எதிரான மனநிலையைக் கருதி இரண்டுமுறை முதல்வர்களை மாற்றியது. இதனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை காங்கிரஸ் நழுவவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். உத்தராகண்டின் செல்வாக்கான காங்கிரஸ் முகமான ஹரிஷ் ராவத்தை விரைந்து அங்கு அனுப்பாமல், பஞ்சாபில் சித்து - அமரிந்தர் - சரண்ஜித் சன்னி பஞ்சாயத்தை தீர்க்க அனுப்பியது காங்கிரஸ்.

காங். வேட்பாளர் அறிவிப்பின் தாமதம்:

தேர்தலுக்கு சில மாதங்கள் முன், உத்தராகண்ட் திரும்பிய ராவத்தை, அங்குள்ள உட்கட்சிப் பூசல் கருதி முதல்வர் வேட்பாளராகக்கூட காங்கிரசால் அறிவிக்க முடியவில்லை. அதோடு, 500 ரூபாய்க்கு குறைவாக சமையல் கேஸ் சிலிண்டர், 5 லட்சம் குடும்பத்திற்கு பண உதவி, அரசுப் பணியில் மகளிருக்கு 40 சதவிகிதம் என காங்கிரசின் கவர்ச்சிகர தேர்தல் அறிக்கையையும் மீறி அக்கட்சி தோல்வி கண்டிருக்கிறது.

பாஜக தலைவர்களின் தீவிர பிரசாரம்:

பாரதிய ஜனதாவில் பிரதமர் மோடி மூன்று முறையும் அமித் ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், தனது மாநில தேர்தலுக்கு இடையேயும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என பிரபலங்கள் தீவிரமாக பரப்புரை செய்தனர். மறுபுறம், ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் ஓரிருமுறை மட்டுமே உத்தராகண்டில் பரப்புரை மேற்கொண்டனர்.

உட்கட்சிப் பூசல்:

உத்தராகண்ட் காங்கிரசார் உட்கட்சிப் பூசலில் உச்சகட்டமாக ஈடுபட, தேசியம், ஆன்மிக சுற்றுலா, ராணுவத்தினர் நலன் ஆகியவற்றை முன்வைத்து பாரதிய ஜனதா பரப்புரை அமைந்தது. அதோடு, தேசிய அளவில் காங்கிரசின் பலவீனமான தோற்றமும் அக்கட்சிக்கு இளைய மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்கு கிடைக்காமல் செய்ததே தோல்விக்கு காரணமானதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.