டிரெண்டிங்

சிபிஐ விவகாரத்தில் காங். நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம் - டெல்லியில் ராகுல் கைது

சிபிஐ விவகாரத்தில் காங். நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம் - டெல்லியில் ராகுல் கைது

webteam

சிபிஐ இயக்குநர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் பிரதான புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையமான சிவிசி அனுப்பியுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிவந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் உடனடியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் பேரணி நடைபெற்றது. சிபிஐ தலைமை அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். சிபிஐ தலைமை அலுவலகம் நோக்கி சென்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர். அதனையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் சிபிஐ அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறுகின்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சிபிஐ இயக்குநரின் கட்டாய விடுப்புக்கு எதிரான வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் ’சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்பான விசாரணையை, ஓய்வுப் பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொள்ள வேண்டும். 10 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்’ என்று கூறினார். மேலும், ’பொறுப்பு இயக்குநர் எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது; நிர்வாக விவகாரங்களை மேற்பார்வை மட்டுமே செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கின் மறு விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.