டிரெண்டிங்

பிரதமர் மோடி வருகைக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு - கோவை, ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

kaleelrahman

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோவை, ஈரோட்டில் கருப்புக்கொடி காட்ட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிரதமர் மோடிக்கு எதிராக கோவை மாவட்டம் பீளமேட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்புக் கொடி காட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்த மோடி, தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இதேபோல் தமிழக சட்டபேரவையில் ஏழு பேர் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றம் செய்த போதும் இதுவரை ஆளுநர் விடுதலை செய்யாதது, 3 வேளாண் சட்டங்கள் மற்றும் புதிய மின்சார சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்வது உள்ளிட்டவைகளை கண்டித்து தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலனை காவல்துறையினர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.