டிரெண்டிங்

“கர்நாடகாவில் ஒரு வாரத்தில் ஆட்சி அமைப்போம்” - ஷாக் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ

“கர்நாடகாவில் ஒரு வாரத்தில் ஆட்சி அமைப்போம்” - ஷாக் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ

rajakannan

கர்நாடகாவில் அடுத்த வாரம் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என அக்கட்சியின் மூத்த எம்எல்ஏ உமேஷ் கட்டி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். கடந்த மே 12-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றினாலும் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதன்படி குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 

குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே அவருக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதாக அப்பொழுதே செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியொன்றுமில்லை, எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளனர் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. 

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையிலான இந்தச் சலசலப்பு தற்போது நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கம் வரை தொடர்ந்து வருகிறது. அண்மையில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கப்பட்ட நிலையில் அதில் சிலர் நீக்கப்பட்டனர். மேலும் சிலர் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 15 பேர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் தங்களது கட்சியில் சேர்வதாக இருந்தால் வரவேற்பதாகவும் பாஜகவின் மூத்த எம்.எல்.ஏ உமேஷ் தெரிவித்துள்ளார். 8 முறை எம்.எல்.ஏ ஆக பதவி வகித்துள்ள உமேஷின் கூற்று,  கர்நாடக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. 

இதற்கிடையில் உமேஷ் கட்டியின் பேச்சு கற்பனையானது என்றும் மக்களை குழப்பும் வகையில் அவர் பேசி வருவதாகவும் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவும், காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை மறுத்துள்ளார். அதேபோல், கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும், மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிடப் போவதாகவும் முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். 

224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக பேரவையில் 37 உறுப்பினர்கள் கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம், 80 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 104 உறுப்பினர்கள் உள்ளனர்