சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் விருதுகள், கோட்டை மதநல்லிணக்கம் மற்றும் வேளாண் துறை சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதக்கம் அணிவித்து சிறப்பித்தார்.
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சண்முகத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். எழும்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் சண்முகம், கடந்தாண்டு ஜூலை மாதம் தாதர் விரைவு ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட பயணியை காப்பாற்றியதற்காக அண்ணா விருதை பெற்றுள்ளார். தங்க முலாம் பூசிய பதக்கத்துடன், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.
மதநல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர்களுக்கான கோட்டை அமீர் பதக்கம் திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவர் சாதிக் பாஷாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மதப்பிரச்னை மற்றும் 2017-ஆம் ஆண்டு இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடையே ஏற்பட்ட பிரச்னையை சுமூகமாகத் தீர்க்க காவல்துறைக்கு சாதிக் பாஷா உதவியுள்ளார்.
தமிழக காவல்துறையில் சிறப்பாகச் செயல்பட்ட 5 பேருக்கு 2017-ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட்டது. தஞ்சை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், சேலம் மண்டல மத்திய புலனாய்வுப்பிரிவு சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு சிறப்பாக செயல்பட்டதற்காக விருது வழங்கப்பட்டது. இதே போல், வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலைய தலைமைக் காவலர் நாராயணன், விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமைக் காவலர் ஜோசப், பழவந்தாங்கல் காவல்நிலைய முதல்நிலைக் காவலர் நாராயணன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பதக்கத்துடன் 40,000 ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
திருந்திய நெல்சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண்மைத் துறை சிறப்பு விருது இந்தாண்டு தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையில் நீர்மறைய நீர் பாய்ச்சுதல் முறையை கடைப்பிடித்து முனுசாமி சாகுபடி செய்துள்ளார்.
வறட்சி மாவட்டமான தருமபுரியிலும் திருந்திய நெல்சாகுபடியை சாத்தியப்படுத்திய விவசாயி முனுசாமிக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பதக்கத்தையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கி பெருமைப்படுத்தினார்.