கோவை தெற்கு தொகுதியில் களம் காணும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனத்திற்கு பதில் சொல்லும் விதமாக இன்று கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டதோடு மக்களிடம் நேரில் சென்று கலந்துரையாடினார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், தேர்தலுக்கு பிறகு நடிக்க சென்று விடுவார். ஆனால் நான் மக்களுடன் இருப்பேன் என பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் நேற்று விமர்சனம் ஒன்றை முன்வைத்தார். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், நான் நடிக்க சென்றுவிடுவேன் என்கிறார்கள். அது என் தொழில் இது என் கடமை என பதிலளித்த அவர், கோவையில் நான் ஏன் போட்டியிடக்கூடாது எனக் கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பந்தயசாலை, ராமநாதபுரம் பகுதிகளில் நடைபயிற்சிக்கு சென்றதுடன் மக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றதுபோல் கோவை தெற்கு தொகுதியையும் மாற்றி காட்டுவேன் என சூளுரை மேற்கொண்ட கமல்ஹாசன், இன்று மக்களை சந்தித்து உரையாடி. கோவை தெற்கு தொகுதியில் பரப்புரையை மேற்கொண்டார்.