டிரெண்டிங்

“மோசடி வழக்கில் ஆவணங்களை அழித்தார் கொல்கத்தா கமிஷனர்” - நாகேஸ்வர் ராவ்

rajakannan

நிதிநிறுவன மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க கொல்கத்தா காவல் ஆணையர் மறுத்துவிட்டதாக சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க தெற்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அங்கு, சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வந்து சேர்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர் ராவ் கூறியுள்ளார். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். 

ஊடகங்களில் பேசிய நாகேஸ்வர் ராவ், “மேற்குவங்கத்தில் நிதிநிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையருக்கு எதிராக ஆவணங்கள் உள்ளன. நிதிமோசடி வழக்கில் ஆதாரங்களை அழிக்க காவல் ஆணையர் ராஜீவ்குமார் காரணமாக இருந்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரப்படி நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. 

உச்சநீதிமன்ற உத்தரவுக்குமுன் ராஜீவ்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது மாநில அரசு. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது கைப்பற்றிய ஆவணங்கள் சிபிஐயிடம் தரவும் ஒத்துழைக்கவும் ராஜீவ்குமார் மறுத்துவிட்டார். ஆவணங்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டும், காணாமலும் போய்விட்டன” என்று கூறினார்.