அம்மா அப்பாக்கள் என்னதான் குழந்தைகளை திட்டி கண்டித்தாலும் அந்த குழந்தைகளுக்கு ஆதரவாகவும் அரவணைப்பாகவும் இருப்பது என்னவோ பாட்டி தாத்தாக்களே முன் வருவார்கள். இந்த விஷயத்தில் பெரியவர்கள் தான் பெற்ற பிள்ளைகளை எந்த அளவுக்கு கண்டிப்பாக வளர்த்தார்களோ அதற்கு நேரெதிராகவே தன்னுடைய பேரன் பேத்திகளிடம் செயல்படுவார்கள். இதுவே உலக வழக்கமாகவே மாறியிருக்கிறது.
அந்த வகையிலான ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சீனாவில் அண்மையில் அரங்கேறியிருக்கிறது. அப்படி என்ன நடந்தது என காணலாம்.
சீனாவின் ஜெஜியாங் என்ற மாவட்டத்தில் உள்ள மெய்ஜிஆங் பகுதியில் இருக்கும் தனது பாட்டியிடம் அம்மாவை பற்றி புகார் தெரிவிப்பதற்காக 11 வயது சிறுவன் ஒரே நாளில் கிட்டத்தட்ட 130 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் சென்றிருக்கிறார்.
இது குறித்து சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி தளத்தில், “விரைவுச்சாலை அருகே சோர்ந்த நிலையில், பேச முடியாத நிலையில் சிறுவன் சென்றதை கண்ட மக்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் என்ன நடந்ததென தெரிய வந்திருக்கிறது. அதன்படி, அம்மா உடனான தீவிர வாக்குவாதத்தால் அதிருப்தி அடைந்த அந்த சிறுவன் அம்மா பற்றி தனது பாட்டியிடம் புகார் தெரிவிப்பதற்காக 130 கிலோ மீட்டரை சைக்கிளிலேயே கடக்க முற்பட்டிருக்கிறார்.
இதற்காக சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் வழிப்பலகைகளை பார்த்து பார்த்து சென்றிருக்கிறார். இதனால் பல இடங்களில் தவறான வழிகளிலும் அந்த சிறுவன் சென்றிருக்கிறார். பயணத்தின் போது சாப்பிடுவதற்காக வீட்டில் இருந்து பிரெட் மற்றும் குடிப்பதற்கான தண்ணீரை மட்டும் உடன் கொண்டு சென்ற அந்த சிறுவன் ஒரு வழியாக 24 மணிநேரத்தில் தான் செல்ல வேண்டிய இடத்தையும் அடைந்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள மெய்லிஜெஜியாங் என்ற தளம், சிறுவனின் அசாதாரணமான பயணத்தை எண்ணி திகைத்துப்போன போலீசார் சிறுவனை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்திருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளதோடு, தங்களது காரிலேயே சிறுவனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு தங்க வைத்து உணவும் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர் அன்றைய மாலையே சிறுவனின் பெற்றோர் மற்றும் பாட்டியை வரவழைத்து அழைத்துச் செல்லவும் வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக பேசியுள்ள சிறுவனின் தாயார், “என் மீதுள்ள கோபத்தில் பாட்டி வீட்டுக்கு செல்வதாக என்னை மிரட்டுகிறான் என நினைத்தேன்” என்றிருக்கிறார்.