குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு குஜராத் முதலமைச்சர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு உரிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும் என்றும் ஆனால் அதற்கு மாறாக அம்மாநில முதல்வரே ராகுல் காந்தியை கேலியாக பேசி வந்ததுடன், அவருக்கு எதிராக பாரதிய ஜனதாவினரை தூண்டி விட்டுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள திருமாவளவன் இந்த நிகழ்விற்கு குஜராத் முதலமைச்சர் முழு பொறுப்பேற்று பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது மெளனத்தை கலைத்துவிட்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.