டிரெண்டிங்

கொடநாடு வழக்கில் என்னை சிக்கவைக்க சதி : திமுக மீது முதல்வர் குற்றச்சாட்டு

கொடநாடு வழக்கில் என்னை சிக்கவைக்க சதி : திமுக மீது முதல்வர் குற்றச்சாட்டு

webteam

கொடநாடு வழக்கில் தன்னை சிக்கவைக்க திமுக தலைவர் ஸ்டாலின் சதி செய்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டிருந்தார்.அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் ஆகியோர் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கில் மாத்யூ சாமுவேல், சயன், வாலையாறு மனோஜ், ஜிபின், ஷிஜா அணில்,ராதாகிருஷ்ணன் ஆகிய 7 எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேத்யூ சாமுவேல், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேர், முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேச தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் சயன், மனோஜ் ஆகியோர் உணவு விடுதியில் இருந்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் மீது குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக சார்பில் தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். பூவிருந்தவல்லியில் பேசிய முதலமைச்சர்,  கொடநாடு விவகாரத்தில் வேண்டுமென்றே என்மீது பழிபோட்டு சிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும், சயன், மனோஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து என்னை சம்பந்தப்படுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் உண்மை, நீதி, தர்மம் தான் எப்போதும் வெல்லும், அதர்மம் வெற்றி பெறாது என்று பரப்புரையின் போது அவர் தெரிவித்துள்ளார்.