அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் எனவும் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வலியுறுத்தியுள்ளனர்.
மத்தியில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 543 தொகுதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட மக்களவை தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 279 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.
இதில் ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளும், தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளும் ஒரே கட்டமாகத் தேர்தலைச் சந்திக்கின்றன. அதில் அதிகபட்சமாக தெலங்கானாவில் இருந்து 443 வேட்பாளர்களும் ஆந்திராவில் இருந்து 319 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். குறைந்த பட்சமாக லட்சத்தீவில் 6 வேட்பாளர்கள் நிற்கின்றனர். முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 14 கோடியே 22 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 664 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அரோரா கேட்டுக் கொண்டுள்ளார்.