நீரில் மூழ்கிய பேருந்து கூகுள்
டிரெண்டிங்

சத்தீஸ்கர்|ஆற்றில் கவிழ்ந்த பள்ளி வாகனம்..தண்ணீரில் தத்தளித்த குழந்தைகள்;உயிர்களை காத்த கிராமமக்கள்!

சத்தீஸ்கரில் பள்ளி வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில், பள்ளிக் குழந்தைகள் 18 பேர் நீரில் மூழ்கினர். நல்வாய்ப்பாக, அங்கிருந்த கிராம மக்களின் உதவியால் அனைத்து பள்ளிக் குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர்.

Jayashree A

சத்தீஸ்கரில் பள்ளி வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில், பள்ளிக் குழந்தைகள் 18 பேர் நீரில் மூழ்கினர். அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த மக்களின் உதவியால் அனைத்து மாணவர்களும் காப்பாற்றப்பட்டனர்.

சத்தீஸ்கரில் உள்ள சக்தி மாவட்டத்தில் நேற்று 18 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து ஒன்று ஹசோத் பகுதியில் இருக்கும் பிசோட் என்ற இடத்தில் இருக்கும் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து செல்லும் பகுதியில், சோன் ஆற்றுக்கு நடுவில் பாலம் ஒன்று உள்ளது. தினமும் பள்ளிப் பேருந்தானது அந்த பாலத்தைக் கடந்து செல்லும். அதே போல் பள்ளி பேருந்தானது 18 பள்ளிக் குழந்தைகளுடன் சென்றுக்கொண்டிருக்கையில், பேருந்தின் ஸ்டியரிங் வேலை செய்யாததால் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்தானது சோன் ஆற்றில் கவிழ்ந்தது. பேருந்துடன் பள்ளிக்குழந்தைகள் ஆற்றில் மூழ்கத்தொடங்கினர்.

நல்லவேளையாக சோன் ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த சிலர் பேருந்து கவிழ்ந்ததைக் கண்டு உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீரில் நீந்திச்சென்று பள்ளிக்குழந்தைகள் 18 பேரையும் காப்பாற்றி உள்ளனர். இது அனைத்தும் 4 நிமிடங்களுக்குள் நடந்துள்ளது. விபத்து நடந்ததை தெரிந்துக்கொண்ட போலிசாரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.

இதில் இரண்டு சிறுவர்கள் தண்ணீரை உறிஞ்சியதால் அவர்களை சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் பள்ளி வாகனம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. அக்கிராம மக்களின் உதவியால் பெரும் அசம்பாவிதமானது தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம்தான் அனைத்து பள்ளிகளின் வாகனங்களும் தகுதியின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டிருந்தாலும், இவ்விபத்திற்கு பிறகு மீண்டும் அனைத்து பள்ளிகளின் வாகனங்களும் தகுதி சோதனை நடத்தப்படவேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.