டிரெண்டிங்

ஆச்சியை சீண்டிய அமைச்சர்: மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

ஆச்சியை சீண்டிய அமைச்சர்: மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

webteam

தமிழக அமைச்சர் ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் பேசியிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

நேற்று மதுரையில் செய்தியாளார்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ, ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் “ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது; காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்” என்று கூறினார். 

அமைச்சரின் இந்தப் பேச்சு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகக் கூறி அவரை கண்டிக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அனைத்து செட்டியார்கள் சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆலங்குடி, செட்டிகுளம், சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று கோஷமிட்டு ஆலங்குடி வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து  ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த 100க்கு மேற்பட்டவர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னிப்பு கோராவிட்டால் தொடர் போராட்டம் நடத்த இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இதனைதொடர்ந்து காரைக்குடி நகரத்தார் சங்க தலைவர் ரெங்கநாதன் “ஒரு சமூகத்தின் மரியாதைக்குரிய பெண்களை இழிவுபடுத்தி பேசியது பொறுப்பற்ற பேச்சாகும் என்றும் ஒரு சமூகத்தின் மதிப்பிற்குரிய பெண்களை ஒரு பொறுப்பில் இருக்கிற அமைச்சர் பேசி இருப்பது கண்டிக்கத்தக்க போக்காகும்” என்று தெரிவித்துள்ளார்.