"மறுபடியும் மெஷின் வைக்கிறீங்க... ஓட்டுச் சீட்டு முறையை கொண்டு வாங்க" என கேட்டார் சென்னைப் பெண் ஒருவர். அதற்கு, "அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும்" என அதிகாரிகள் பதில் அளித்தனர். மாதிரி வாக்குப் பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இந்த ருசிகர நிகழ்வு நடந்துள்ளது.
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 100 சதவீத வாக்குப் பதிவு நடைபெற வேண்டுமென தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தயக்கமின்றி வாக்குப்பதிவு செய்வதற்காக ஆங்காங்கே மாதிரி வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்கு பதிவு செய்யும் முறை குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பூந்தமல்லி பஜார் பகுதியில் வைக்கப்பட்ட மாதிரி வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து கேட்டறிய அங்கு வந்த பெண் ஒருவர், "ஏன் சார் மீண்டும் மெஷினை வைக்கிறீங்க... ஓட்டு சீட்டு முறையை கொண்டு வாங்க” என்று சொன்னார். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், இதனை அரசாங்கத்திடம் தான் கேட்க வேண்டும் என்று லாவகமாக பதிலளித்தனர்.
இதையடுத்து, அந்தப் பெண் இயந்திரத்தில் வாக்கு செலுத்தும் முறை எப்படி என்பது குறித்து கேட்டறிந்து சென்றார். இதேபோன்று பல்வேறு இடங்களில் மாதிரி வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்கு பதிவு செய்யும் முறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.