டிரெண்டிங்

முதுநிலை மருத்துவம் படிப்பவர்களின் பணி விவகாரம் : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முதுநிலை மருத்துவம் படிப்பவர்களின் பணி விவகாரம் : உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

webteam

முதுநிலை மருத்துவம் பயின்றவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு படித்த மாணவர்கள், படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து 276 மாணவ, மாணவிகள் தொடர்ந்த வழக்கில், இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கையின்போது மாநில அரசுகள் நிபந்தனை விதித்து கொள்ளலாம் என்று விதிகள் உள்ளதாகவும், அதன்படி தமிழக அரசு வழங்கும் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி வழங்கும் வசதிகளை பயன்படுத்தி படிக்கக்கூடிய மாணவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது தமிழக மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்று நிபந்தனை கொண்டுவரப்பட்டதாக வாதிட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் தமிழக மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவப்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்கள், கட்டாயம் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்றும், பணிபுரிந்த பின்பே சான்றிதழ் வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரிதான் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.