ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் அளித்து தினகரன் வெற்றி பெற்றதாகவும், எனவே அவ்வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரியும் சுயேச்சை வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இடைத்தேர்தலின் போது 30 லட்சம் ரூபாய் பிடிபட்டதாக குற்றச்சாட்டு இருந்தாலும், அவை தினகரனிடம் இருந்து பிடிபட்டதற்கான ஆதாரம் இல்லை என தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்ட பிறகே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்றும், ஒருவர் மற்றொருவருக்கு பணம் கொடுத்தார் என்றுதான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனரே தவிர, யாருக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் இவ்வழக்கை அனுமதிக்க போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி, மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.