டிரெண்டிங்

``தேர்தல் கண்காணிப்புக்காக சென்னையில் 90 பறக்கும் படைகள்”- ககன்தீப்சிங் பேடி

``தேர்தல் கண்காணிப்புக்காக சென்னையில் 90 பறக்கும் படைகள்”- ககன்தீப்சிங் பேடி

நிவேதா ஜெகராஜா

வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை, இன்றுடன் முடியவிருக்கும் நிலையில் சென்னையில் தேர்தல் கண்காணிப்புக்காக 90 பறக்கும் படை குழுக்கள் தங்கள் பணியை மேற்கொள்ள இருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் / சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் தற்போது 45 பறக்கும் படைகள் செயல்பட்டு வரும் நிலையில், கண்காணிப்பு பணியை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக 45 பறக்கும் படை வாகனத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ரிப்பன் மாளிகையில் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய இருக்கிறது. அதற்குப் பிறகு யாரும் பிரசாரம் செய்யக் கூடாது. ஏற்கெனவே 45 பறக்கும் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக 45 பறக்கும் படை என மொத்தமாக 90 பறக்கும் படைகள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இதில் மாநகராட்சி அலுவலர்கள் போலீசார் மற்றும் வீடியோகிராபர்கள் கண்காணிப்பு செய்வார்கள்.

தேர்தல் தொடர்பான விதிமீறல்களுக்கு இலவச தொலைபேசி எண் 1800-425-7012 மூலமாக பறக்கும் படைக்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிகளை மீறியதாக ஏற்கெனவே 69 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் தீவிரமாக கண்காணிக்கப்படும். போஸ்டர் அனுமதி இல்லை என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனாலும் தற்போது தேர்தல் நேரத்தில் பல்வேறு வேட்பாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. 21,000 மேற்பட்ட போஸ்டர்கள் இதுவரை சென்னையில் அகற்றப்பட்டுள்ளது. மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவற்றை மீறி போஸ்டர் மட்டும் இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றுடன் போஸ்டர் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும், அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வேட்பாளர் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.

இரவு நேரம் மற்றும் அதிகாலை என இரண்டு நேரங்களில் பணம் பட்டுவாடா மற்றும் பொருட்கள் கொடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது. எனவே பறக்கும் படையினருக்கு அதிகாலை, இரவு நேரங்களிலும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன். யாராவது பணம் பட்டுவாடா ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 1 கோடியே 45 லட்சம் ரூபாய் பொருட்கள் மற்றும் பணம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுமார் 27,000 தேர்தல் அலுவலர்கள் இதற்கான பணியில் உள்ளனர். நேரடியாக Live streaming செய்தும் கண்காணித்து வருகிறோம். மின்னணு வாக்கு இயந்திரம் தயார் நிலையில் இருக்கிறது. உதவி அலுவலர் மூலம் வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்ப ஏற்பாடுகள் இருக்கும். வாக்கு இயந்திரம் பழுது ஏற்பட்டால் சரி செய்ய 27 நபர்கள் கொண்ட வல்லுனர் குழு தயாராக இருக்கிறார்கள்” என்றார்.