டிரெண்டிங்

நீண்டதூரம் நின்ற வாகனங்கள் : செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்

நீண்டதூரம் நின்ற வாகனங்கள் : செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்

webteam

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நின்றதால் சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டாம் என மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலுள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு பொதுமுடக்கம் வரும் ஜூன் 19ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இதனால் சென்னையிலிருந்து, சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய போலீசாருக்கு செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார்.

இதையடுத்து வண்டலுார், பரனுார், ஆத்துார், பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இ-பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே பிற மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. 

இதற்கிடையே சென்னையில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், செங்கல்பட்டின் பரனூர் சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நின்றன. இதனால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், சுங்கச்சாவடியில் பணம் வசூலிக்க வேண்டாம் என மாவட்ட காவல்துறை எஸ்பி கண்ணன் நேரில் வந்து உத்தரவிட்டார். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள் தற்போது வேகமாக செல்கின்றன.