டிரெண்டிங்

காங். அலுவலகத்தில் கோஷ்டி மோதலா? - திருநாவுக்கரசர், இளங்கோவன் ‘புது’ விளக்கம்

காங். அலுவலகத்தில் கோஷ்டி மோதலா? - திருநாவுக்கரசர், இளங்கோவன் ‘புது’ விளக்கம்

rajakannan

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில், இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய்தத், சென்னை வந்துள்ளார். அவரது தலைமையில் கட்சியின் மாவட்ட தலைவர்கள், அனைத்துப் பிரிவு தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

எதிர்வரும் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள், வெற்றிபெறும் வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து நடைபெற்றுக் கொண்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற அனுமதிக்குமாறு 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நுழைவு வாயிலில் இருந்தவர்களிடம் கேட்டனர். அழைப்பு உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாக கூறப்பட்டதால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

தகவலறிந்து வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இரு பிரிவினரையும் சமாதானம் செய்து வைத்தார். புதிய மேலிடப் பொறுப்பாளரான சஞ்சய்தத், அலுவலகத்தில் இருந்தபோதே நடைபெற்ற இச்சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “அழைப்பில்லாமல் வந்தவர்கள் தான் வெளியேற்றப்பட்டனர். எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார். 

அதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் தலைவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கூறுகையில், “கோஷ்டி மோதல் ஏதுமில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் கட்சியினர் ஒன்றாக பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கட்சியினர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் கை குலுக்கி கொண்டனர்” என்றார்.