டிரெண்டிங்

குஜராத் காங். தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்

குஜராத் காங். தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்

webteam

குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஷங்கர்சின்ஹ் வகேலா காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஷங்கர்சின்ஹ் வகேலா-வை முதல் மந்திரி வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என இவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வகேலாவை முதல் மந்திரி வேட்பாளராக முன்னிறுத்தினால் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை உருவாக்கலாம் என்று ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இறுதிமுடிவு எதுவும் எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வகேலாவுக்கு ஆதரவான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் எட்டு பேர் கட்சி மேலிடத்தின் உத்தரவை மதிக்காமல் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து வாக்களித்திருந்தது கட்சியின் தலைமைக்கு தெரியவந்தது.

அடுத்த மாதம் குஜராத் மாநில சட்டசபையில் இருந்து நாடாளுமன்ற மேல்சபைக்கு மூன்று உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் நடந்ததுபோல் நாடாளுமன்ற மேல்சபை தேர்தலின்போது வகேலாவின் ஆதரவாளர்கள் அணிமாறி வாக்களிக்க கூடும் என்ற அச்சம் காங்கிரஸ் மேலிடத்துக்கு உருவாகியுள்ளது. இதேநிலையில் பழுத்த அரசியல்வாதியான வகேலாவுக்கு குஜராத் மாநில மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளது. இவரது தனிப்பட்ட செல்வாக்கு இங்குள்ள பத்துக்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிச்சயிக்கும் வகையில் இருப்பதால் வகேலாவின் எதிர்ப்பை சம்பாதித்து கொள்ள விரும்பாத காங்கிரஸ் தலைமை, இவ்விவகாரத்தில் அவர்மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வந்தது.

இந்நிலையில், தற்போது 77 வயதாகும் வகேலா, காந்தி நகரில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையின் உத்தரவுக்கு பயந்து அவரது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர். இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வெகு சொற்பமான ஆதரவாளர்களிடையே இன்று பேசிய வகேலா, காங்கிரஸ் தலைமை தன்னை நேற்று கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும், தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்து விட்டதாகவும் தெரிவித்தார். காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டுள்ள வகேலா மீண்டும் தனது தாய்க்கட்சியான பா.ஜ.க.வில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ள நிலையில், வேறு எந்தக் கட்சியிலும் நான் சேரப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.