டிரெண்டிங்

தேர்தல் செலவை குறைவாக காட்டிய வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்

தேர்தல் செலவை குறைவாக காட்டிய வேட்பாளர்களுக்கு நோட்டீஸ்

webteam

கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் சிலர் அவர்களின் தேர்தல் செலவு கணக்கை குறைவாக காட்டியுள்ளதற்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போது தேர்தல் ஆணையத்திற்கு மிகவும் சவாலாக இருப்பது தேர்தல் பணப் பட்டுவாடாதான். இதனைக் கட்டுபடுத்த தேர்தல் ஆணையம் தேர்தல் பறக்கும் படை அமைத்துள்ளது. எனினும் அதிக இடங்களில் கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைவிட இம்முறை தேர்தல் களத்தில் அதிகளவில் பணம் பிடிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

ஒவ்வொரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் செலவு கணக்குக்களை தாக்கல் செய்யவேண்டும். அந்த வகையில் கர்நாடகா மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களின் செலவு கணக்குகளை தாக்கல் செய்தனர். அதில் வேட்பாளர்கள் மிகவும் குறைந்த தொகையை தாக்கல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

குறிப்பாக பாஜக வேட்பாளர் தேவேந்திரப்பா வெறும் 4.64 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். அதேபோல காங்கிரஸ் கட்சியின் உகுரப்பா 6.58 லட்ச ரூபாய் தேர்தல் செலவாக தாக்கல் செய்துள்ளார். அதிகபட்சமாக ஹவேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் டி.ஆர்.பாட்டில் 59.8 லட்சம் ரூபாய் தேர்தலுக்காக செலவு செய்துள்ளார்.

மேலும் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் 39 லட்ச ரூபாயை தேர்தல் செலவாக காட்டியுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட்ட நடிகை சுமலதா 33 லட்ச ரூபாய் தாக்கல் செய்துள்ளார்.  தேர்தல் ஆணையம் ஒரு மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ70 லட்சம் செலவு செய்யலாம் என நிர்ணயித்துள்ளது. அந்த விதியை யாரும் மீறாவிட்டாலும் சில வேட்பாளர்கள் தங்களின் செலவுகளை குறைத்து கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதனால் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதிலும் குறிப்பாக ஹெச்.டி. தேவ கவுடாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேவகவுடா தேர்தல் செலவாக ரூ 36 லட்சத்தை தாக்கல் செய்துள்ளார். ஆனால் தேர்தல் ஆணையத்தின் மாதிரி செலவு கணக்குபடி அவர் 56 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். தேர்தல் செலவை குறைவாக தாக்கல் செய்ததால் அவரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதேபோல சுமலதாவும் தனது தேர்தல் செலவை குறைவாக தாக்கல் செய்துள்ளதால் அவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாஜகவின் காடிகவுடா 69 லட்சம் செலவு செய்துவிட்டு தேர்தல் செலவாக 26 லட்சத்தை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.