குடியிருப்பு பகுதிகளில் அண்டை வீட்டார்களால் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளால் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அந்த சண்டைகள் வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் சில நேரங்களில் சட்ட சிக்கலிலும் இட்டுச் செல்லும்.
அந்த வகையில்தான் ஜெர்மனியை சேர்ந்த முதிய தம்பதி ஒருவர் பக்கத்து வீட்டில் இருக்கும் சேவலால் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சேவலால் என்ன பிரச்னை வரப்போகிறது என கேள்வி எழலாம்.
ஆனால் அந்த சேவல் எந்நேரமும் கூவிக் கொண்டே இருப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது எனக் குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
67 வயதான ஃபெட்ரிச் வில்ஹெல்ம் அவரது மனைவி ஜுட்டா உடன் ஜெர்மனியின் Bad Salzuflen பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் மைக்கேல் என்பவரின் சேவலால்தான் இந்த தம்பதி மட்டுமல்லாமல் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம்.
ஏனெனில், அந்த சேவல் காலை 8 மணிக்கு முன்பு வரை கூவாமல் இருந்துவிட்டு, நாள் முழுவதும் 100 முதல் 200 முறை கூவுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக சேவலை வளர்க்கும் மைக்கேலிடம் பல முறை சொல்லியும் எந்த பயனும் இல்லை. இந்த சேவலால் ஒரு குடும்பமே வீட்டை காலி செய்துவிட்டார்கள்.
இதனால்தான் வழக்கு தொடர முடிவெடுத்து சேவல் கூவும் சத்தத்தையும் பதிவு செய்திருக்கிறோம். அதன்படி 80 முதல் 95 டெசிபல் வரை அந்த சேவல் கூவுகிறது. இது டிராஃபிக் நிறைந்த வாகனங்களின் சத்தத்திற்கு இணையாக இருக்கிறது எனக் குறிப்பிட்டு மனு கொடுத்திருக்கிறார்கள்.
இதனிடையே, மக்டா என பெயரிடப்பட்டிருக்கும் அந்த சேவல் தன்னுடைய தோட்டத்துக்கு தேவையானதாக இருக்கிறது எனவும் மைக்கேல் கூறியிருக்கிறார்.