காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படமுடியாது என்றும், அனைத்து மாநிலங்களையும் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும் எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் பேசிய அவர், இதனை கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன் பேசுகையில், “மேலாண்மை வாரியம் தொடர்பாக அனைத்து மாநிலங்களையும் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்க முடியும். மாநிலங்களுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவை நீதிமன்றத்தில் சொல்வோம். நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை இருக்கிறது. அங்கு ஒவ்வொரு விதமாக வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது ஆணையமாகவோ, வாரியமாகவோ இருக்கலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைப்பு. உடனடியாக வாரியம் அமைப்போம் என்று எந்த வாக்குறுதியும் அளிக்க முடியாது. அதற்கு காரணம் மத்திய அரசு எதனையும் செய்யாமல் இருக்கிறது என்பது அர்த்தமல்ல; எல்லா மாநிலங்களுடனும் மத்திய அரசு பேசிக் கொண்டுதான் இருக்கிறது” என்று கூறினார்.
இதனிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக அரசின் வழக்கறிஞர்கள் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கால அவகாசம் கோரினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.