ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் உத்தரப்பிரசேத்தில் தேர்தலை தள்ளிவைப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு தேர்தலை ஆணையத்தையும் மத்திய அரசையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா 3வது அலை ஏற்படும் என்ற அச்சம் நிலவும் நிலையில் அரசியல் கட்சிகளின் பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி போடும் பணிகளுக்காக பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டி உள்ள நீதிமன்றம், தேர்தலை தள்ளிவைப்பது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதிப்பதன் மூலம் 3வது அலையின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க முடியும் என நீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி, நாளிதழ்கள் மூலம் பரப்புரையை மேற்கொள்ளலாம் என்றும் யோசனை கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு இந்த உத்தரவு நகல்களை அனுப்புமாறு நீதிமன்ற பதிவாளருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.