டிரெண்டிங்

சபாநாயகர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடலாமா.?

சபாநாயகர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடலாமா.?

Rasus

சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் எந்தளவு தலையிடமுடியும் என்பது குறித்து, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆந்திராவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர், வேறு கட்சிகளுக்கு சென்றதால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கடந்த 2014-ம் ஆண்டு கடிதம் அளிக்கப்பட்டது. அந்த கடிதம் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சம்பத் என்பவர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கியது.

அதனை எதிர்த்து மனுதாரர் சம்பத் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், அது நீண்ட காலமாக கிடப்பில் உள்ளதாக இன்று புகார் கூறப்பட்டது. மேலும், சபாநாயகர் அதிகாரம் தொடர்பாக மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, சபாநாயகர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவது குறித்து, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்கும் என அறிவித்தது.

தமிழகத்திலும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் எந்தளவு தலையிடமுடியும் என்பது குறித்து, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.