டிரெண்டிங்

புதிய தலைமுறை மீதான வழக்கு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை

Rasus

புதிய தலைமுறை மீதான வழக்கு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நலம் பற்றி விசாரித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வட்ட மேசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியதில் புதிய தலைமுறை ஊடக நெறியுடன் செயல்பட்டதாக குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே எனக்கு முக்கிய நோக்கம் உண்டு. அதனால்தான் எல்லோரும் வரம்பு மீறாமல் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் வாதங்களை முன்வைத்து பேசினர். ஆனால் அமீர் யார் கொலையை பற்றி பேசினாரோ அவரின் உறவினர்களே அங்கு இருந்தனர். அதனால் கோபப்பட்டு அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அமீர் அப்படி பேசியிருக்கவே கூடாது. மிகத் தவறு. அரசியலில் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒருவரை இழந்து இருக்கிறார்கள். ரத்த வெள்ளத்தில் அவர்களை பார்த்து இருக்கிறார்கள். எனவே சசிகுமார் படுகொலையை பற்றி பேசியிருக்க கூடாது. ஆனால் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். ஊடகத்தினர் சரியாக எடிட் செய்திருந்தனர். ஊடகம் சரியாகத்தான் செயல்பட்டது. அதனால் புதிய தலைமுறை மீதான வழக்கு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் தலைவர்கள் தங்களது பொறுப்புணர்ந்து பேச வேண்டும்” என தெரிவித்தார்.