டிரெண்டிங்

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 100 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு - முதல்வர் மம்தா

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 100 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு - முதல்வர் மம்தா

webteam

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 100 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அம்மாநிலத்தின் முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

294 தொகுதிகளுக்கான மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுமார் 100 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. அதாவது, மொத்த வேட்பாளர்களில் 30 சதவிகிதம் பேர் பெண் வேட்பாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு மம்தா முக்கியத்துவம் வழங்குவது இது முதல்முறை அல்ல. 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து காலியான மாநிலங்களவையின் நான்கு இடங்களில் இரண்டு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 41 சதவிகித இடங்களை பெண்களுக்கு வழங்கினார். அதில் மேற்கு வங்க திரைப்பட நடிகைகளான நச்ரத் ஜகான், மிமி சக்கரவர்த்தி, ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

நடப்பு நாடாளுமன்றத்தில், நாட்டிலேயே அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் இருந்துதான் 11 பெண் எம்பிகள் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் 50% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கினார் மம்தா.

மொத்த வாக்காளர்களில் 48.5 சதவிகிதம் பேர் பெண்கள் என்பதுதான் மம்தா பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக காரணமாக சொல்லப்பட்டாலும், சீருடைப் பணிகளில் பதவி உயர்வில் பெண்களுக்கும் சம உரிமை, ஏழை, எளிய பெண்களுக்கு திருமணம் செய்விக்கும் கன்யஸ்ரீ பிரகல்பா என பெண்களுக்கான திட்டங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி என இருமுனை தாக்குதல்களை எதிர்கொள்ளும் மம்தா பானர்ஜி "உங்கள் வாக்கு வங்கத்தின் மகளான எனக்கே" என்று பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், வங்கத்தின் மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.