வைக்கோல் ஏற்றி வந்த லாரி உயர் மின்கம்பியில் உரசி தீப்பிடித்து மளமளவென எரிந்தது. லாரி ஓட்டுனர் சாதுரியமாக அருகே உள்ள குளத்தில் லாரியை இறக்கி தீயிலிருந்து லாரியை காப்பாற்றிக் கொண்டார்.
ஏரிகள் நிறைந்த மாவட்டம் என பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் இந்த ஆண்டு நெல் அமோகமாக விளைந்துள்ளது. அதன் அறுவடை முடிந்த பின்னர் வைக்கோல்களை வெளி மாநிலங்களுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள தைப்பாக்கம் என்ற கிராமத்தில் நெல் அறுவடை முடிந்துள்ளது. ஆந்திர மாநிலம் பலமனேரியைச் சேர்ந்த வியாபாரி வைக்கோல் கட்டுகளை வாங்கி லாரியில் ஏற்றிக் கொண்டு தைப்பாக்கத்தில் இருந்து கிளம்பினார்.
அப்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து கொண்டிருந்தபோது வைக்கோல் உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதில் தீப்பொறி கிளம்பியது. அந்த தீப்பொறி வைக்கோலில் பட்டு மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற லாரி ஓட்டுனர் சாதுரியமாக குளம் உள்ள பகுதியை நோக்கி லாரியை வேகமாக ஓட்டிச் சென்றார். தீப்பிடித்து எரிந்த வைக்கோல் கட்டுகளை தூக்கி தூர வீசிவிட்டு மற்ற வைக்கோல் பண்டல்கள் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
இதனிடையே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வேகமாக வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்த பின்பு காஞ்சிபுரம் சென்று விட்டனர். அவர்கள் சென்ற சிலமணி நேரத்தில் லாரியில் இருந்த வைக்கோல் மீண்டும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பயந்துபோன லாரி ஓட்டுனர் எங்கே லாரி தீப்பிடித்து தீயில் கருகி விடுமோ என நினைத்து மீண்டும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
மீண்டும் 10 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வைக்கோல்களில் தீ பரவாதவாறு தண்ணீர் பாய்ச்சி முழுவதுமாக அணைத்தனர். முன்னதாக லாரி ஓட்டுனர் குளத்தை நோக்கி வேகமாக லாரியை ஓட்டி வரும்போது 3 உயர் மின்னழுத்த கம்பி மற்றும் கம்பங்கள் சேதம் ஆயின என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.